திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண குடிலின் சொத்துக்களை அபகரிக்க ஆர்.எஸ். எஸ்.ஸைச் சேர்ந்த சிலர் மிரட்டுவதாக சர்ச்சையெழுந்துள்ளது.

Advertisment

கடந்த 67 ஆண்டாக ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சேவை செய்துவருகிறது ஸ்ரீராமகிருஷ்ண குடில். தாய், தந்தை இருவரும் இல்லாத சிறுவர்கள் மட்டுமே இங்கு சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தனர். 2010-ஆம் ஆண்டு முதல் தாயோ, தந்தையோ இருந்து படிக்கவைக்க இயலாத ஆண் குழந்தைகளும் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது 190 மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.

ss

கடந்த வருடம் இந்தப் பள்ளியில் தங்கி யிருக்கும் மாணவர்கள் சிலரை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி துன்புறுத்திய தாக மாணவர்கள் தரப்பிலிருந்தே திருச்சி மண்டல ஐ.ஜி.யிடம் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாருக்கும் இந்த புகார் கடிதம் வந்ததையடுத்து... சமூகநல அலுவலர், குழந்தை கள் நல அலுவலர்களை நேரடியாக விசார ணைசெய்ய உத்தரவிட்டார்.

Advertisment

இந்த ஆய்வில், கிட்டத்தட்ட 7 மாணவர் களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. அதில் பள்ளி ஊழியர் களான சிவகிரி, பார்த்திபன், ஏசுராஜ், தனசேகர் ஆகியோர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். மேலும் இந்த குடிலின் முக்கிய நிர்வாகியான கருப்பையா இந்தப் பள்ளியில் நடந்த பாலியல் பிரச்சனை களை வெளியேசொல்லாமல் மறைத்துவந்ததும், அவருடைய செல்போனில் ஆபாசப்படங்கள் பதிவிறக்கம் செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆக. 12-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் குடிலின் தபோவன குடில் கமிட்டி அவசரமாகக் கூட்டப்பட்டது. கமிட்டியில் உள்ளவர்களே குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைக்குச் சென்றதால், அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட் டது. இந்த குடிலுக்கு சொந்தமாக 60 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த குடிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இந்த பள்ளியில் படித்து பல்வேறு உயர்ந்த நிலைகளில் இருக்கும் பழைய மாணவர்கள் தங்களுடைய உழைப்பின் ஒரு பங்கை இந்த குடிலுக்கு கொடுத்ததில் வாங்கியது. பலகோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளது.

தற்போது இந்தக் குடிலின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளே நுழைந்து மிரட்டுவதாக நமக்கு தகவல் வந்தது. நாம் நேரில்சென்று தற்போது குடிலை நிர்வாகம் செய்யும் பிரம்மச்சாரி வீரச்சந்திரன் என்பவரிடம் பேசியபோது, “"நான் இந்த குடிலில் தான் படித்தேன். 9-ஆம் வகுப்புவரை படித்த நான் 1965-ல் இங்குவந்தேன். இங்கேயே தங்கிவிட்டேன். இங்குள்ளவர்கள் அனைவரும் பிரம்மச்சாரிகள்தான். இதை ஒரு சொசைட்டி யாகப் பதிவுசெய்து அதில் உள்ள சட்டதிட்டங் கள்படி குடில் நிர்வாகத்தை, இந்த குடிலில் படித்து, இங்கேயே தங்கியிருக்கும் பிரம்மச் சாரிகள் மட்டுமே நிர்வாகம் செய்யவேண்டும் என்ற சட்டம் பதிவில் உள்ளது.

Advertisment

ss

சமீபத்தில் இந்த குடிலில் தலைமை நிர்வாகியாக இருந்த கருப்பையா போக்சோவில் கைதுசெய்யப்பட்டதால், அவருக்கு அடுத்து சீனியாரிட்டி அடிப்படையில் நான் நிர்வகித்துவருகிறேன். இந்த சொசைட்டியில் மொத்தம் 12 நிர்வாகிகள் இருக்கவேண்டும். ஆனால் 9 பேர் தான் இருக்கிறார்கள். தலைவர் பிரம்மச்சாரி கருப்பையா, செயலாளர் பிரம்மச்சாரி வீரச்சந்திரன், உறுப்பினர்கள் தனசேகர், பார்த்தீபன், சதாசிவம், செழியன், வீரமணி, இராதாகிருஷ்ணன், திருமூர்த்தி உள்ளிட்ட 9 பேர் இருந்தோம்.

இந்த பிரச்சனைக்குப் பிறகு ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தும் ராமமூர்த்தி என்பவர் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளியின் பழைய மாணவர், ஆனால் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு இங்கிருந்து ஓடிவிட்டார். மீண்டும் 2021-ல் தான் இந்த ஆசிரமத்திற்கு அறிமுகமாகிறார். அவர் தலைவர் கருப்பையாவை மூளைச்சலவை செய்து, பண ஆசை காட்டி இந்த சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டு, அவருடன் சாம்பசிவம், நவிலு மார்பிள்ஸ் சுப்பிரமணி, ஜஸ்டிஸ் மஹாராஜனின் மகனான ஆடிட்டர் சிதம்பரம் ஆகியோர் என்னை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, செயலாளரான நான் இல்லாமலேயே தேர்தலை நடத்தி இந்த நிர்வாகக் குழுவில் தங்களைச் சேர்த்துக்கொண்டனர். அவர்கள் உள்ளே வந்தபிறகு பல பிரச்சனைகள் இந்த குடிலில் நடந்தன. எங்களுக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலமும் தற்போது கூட்டுறவு வங்கியில் அட மானத்தில் உள்ளது. சொத்துக்கள் பலவற்றை விற்பனை செய்துவிட்டனர். நான்தான் அதற்குக் கையெழுத்துப் போடவேண்டும். அதெல்லாம் எப்படிப் போட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.

சமீபத்தில் திருச்சி அல்லூர் பகுதியில் சிலம்பம் கற்றுக்கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்த சுப்பிரமணியன் குடிலுக்கு வந்து "இந்தக் குடிலில் நீ நிரந்தரமாக இருந்தால் உனக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. எங்கள் சொல்படி கேட்டால், உன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து இறுதிவரை பார்த்துக்கொள்வோம், மறுத்தால் குடிலை விட்டு ஓடிவிடு' என்று எச்சரித்துவிட்டுப் போனார். பிரச்சனை தொடங்கி 16 மாதங்கள் கடந்துவிட்டது.

நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளதால் வங்கிக் கணக்கை முடக்கிவிட்டனர். குடிலின் தேவைக்கு போதிய பணமில்லாததால், நாங்கள் உபயதாரர்களை நேரடியாக மளிகைக் கடைக்கு பணத்தைக் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி, எங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக்கொள்கிறோம். வேறு எதுவும் செய்யமுடியவில்லை. எப்படியாவது இந்த குடிலை சத்தியமங்கலம் ஆசிரமத்துட னும், சீரடி சாய்பாபா கோவில் ட்ரஸ்ட்டுடனும் இணைத்துவிட வேண்டுமென்று ஒரு கும்பல் களத்தில் இறங்கியுள்ளது''’என்றார்.

இது சம்பந்தமாக ராமமூர்த்தி என்பவரை நாம் தொடர்புகொண்டு பேசிய போது, “வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. என்னால் எதையும் முழுமையாகச் சொல்லமுடி யாது. இந்த குடிலில், நிதி மோசடி, ஓரினச் சேர்க்கை, பாலியல் துன்புறுத்தல்கள் இருந்ததால்தான் மாவட்ட நிர்வாகம் நேரடியாக வந்து விசாரித்து எங்களை நிர்வாகக்குழுவில் இணைத்தார்கள். முறையான தேர்தல் நடத்தி வீரச்சந்திரனின் அனுமதியோடுதான் நிர்வாகக் குழுவில் நாங்கள் இணைந்தோம். ஒருசில மாதங்களில் மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களின் பங்களிப்பாகவும் பெறப்பட்ட பணத்தில் பல லட்சம் செலவானது குறித்து நாங்கள் வங்கிக் கணக்கை எடுத்துப் பார்த்தபோது 1.5 கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் வழக்கறிஞர்களுக்கு செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த குடிலில் என்னென்ன நிதிமோசடிகள், தவறுகள் நடந்துள்ளதோ, அதை ஒரு புத்தகமாகத் தயாரித்து வீரச்சந்திரனிடம் கொடுத்து அதற்கான விளக்கம் கேட்டுள்ளோம். நாங்கள் யாரும் சத்தியமங்களம் ஆசிரமத்துடனோ, சீரடி சாய்பாபா ட்ரஸ்ட்டுடனோ இந்த குடில் நிர்வாகத்தை இணைக்கத் திட்டமிடவில்லை''’ என்றார்.

ஊர்க்காரர்களிடம் பேசுகையில், "இந்த ஆசிரமம் பழமையான ஆசிரமம். பிரம்மச்சாரி ராமசாமிதான் இதை உருவாக்கினார். இங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும், ஒவ்வொரு இடமும் இந்த குடிலில் படித்து வேலைபார்த்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட சொத்து. அவர்கள் இல்லையென்றால் இந்த குடில் வளர்ந்திருக்காது. இந்த குடிலை நம்பி இங்குள்ள கிராம மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயப் பணிகள், தோட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த குடில் எங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துவருகிறது. ஒருசில அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன என்பதற்காக எங்கள் ஊரின் அடையாளத்தை நாங்கள் மாற்றமுடியாது. ஏனென்றால் இதுதான் எங்கள் ஊரின் அடையாளம், பெருமை எல்லாம். எனவே இந்த குடிலை தொடர்ந்து பிரம்மச்சாரிகளே நடத்தவேண்டும். வேறு குழுக்கள் உள்ளே நுழைந்து குளறுபடி செய்வதாக நாங்கள் கேள்விப்பட்டோம். நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்''’என்றனர்.

இந்த குடில் விவகாரத்தில் பல போலியான ஆவணங்களைக் கொண்டு உறுப்பினர்களைச் சேர்க்க மாவட்ட பதிவாளர் ராஜா உறுதுணை யாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மாவட்ட நிர்வாகத்திற்கும் பங்குள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த குடில் விவகாரத் தில் உண்மையான, நேர்மையான நிர்வாகிகளைத் தேர்வுசெய்து தொடர்ந்து இந்த குடிலை ஏழை மாணவர்களுக்கு உரிய இடமாக மாற்றிட வேண்டும், போலியான நிர்வாகிகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.